தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டு கோடி தொண்டர்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், “அதிமுகவில் இப்போது இருப்பதே வெறும் 10 பேர் தான்; அந்த 10 பேரும் டெல்லி பக்கம் போய்விட்டார்கள்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும், ஒட்டுமொத்த அதிமுகவும் தவெக பக்கம் வந்து வெகு நாட்களாகிவிட்டது என்றும், செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உறவினர்கள் கூட தங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு விஜய்யைப் பார்த்துதான் திமுக பயப்படுவதாகவும், தனது தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ள விஜய் எந்த அழுத்தத்திற்கும் பணியாமல் 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா அந்த மேடையில் முழங்கினார்.