மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், செய்தியாளர்களிடம் பேசுகையில் டிடிவி தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதிமுகவை மீட்டெடுக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்தும், அதனை ஈபிஎஸ் நிராகரித்துவிட்ட நிலையில், தற்போது டிடிவி தினகரன் தவறான கருத்துக்களைக் கூறி வருவதாக அவர் சாடினார்.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே முதலமைச்சர் ஆவதற்கு டிடிவி தினகரன் உதவி செய்தவர் என்றாலும், தற்போது அவர் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்றும், தேர்தல் முடிந்த பிறகு “பசுந்தோல் போர்த்திய புலி” யார் என்பது வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஓபிஎஸ் எடுக்கும் எந்த முடிவிற்கும் அவருக்குப் பின்னால் தான் ஒரு ‘அனுமன்’ போல உறுதுணையாக நிற்பேன் என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் நல்லவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.