நீண்டதூர ரெயில்களில் ஏ.சி வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, ரெயில்வே தரப்பில் ஒரு போர்வை, தலையணை, இரண்டு படுக்கை விரிப்பு, முகம் துடைக்கும் துண்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. பயணத்திற்குப் பிறகு இவையனைத்தும் ரெயில்வே ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சிலர் இந்த வசதிகளை தவறாக பயன்படுத்தி, தங்கள் உடைமையாகக் கொண்டு செல்வது புதிய முறையாக உள்ளது.
டெல்லி, ஒடிசா உள்ளிட்ட சில வடமாநிலங்களில் பயணிகள் போர்வை, விரிப்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது போன்ற திருட்டுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், ரெயில்வேக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை தடுக்கும் முயற்சியாக, ரெயில்களில் வழங்கப்படும் பொருட்கள் பயண முழுவதும் சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, ரெயில் புறப்படும் இடத்திலிருந்து கடைசி நிலையம் வரையிலும் அனைத்து பொருட்களும் முழுமையாக உள்ளதா என அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது, உரிய நடவடிக்கையால் பயணிகளிடம் பொறுப்பு உணர்வு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
