கேரள மாநிலத்தில் அமீபா மூளைக்காய்ச்சல் மீண்டும் உயிர் கொல்லி ரீதியில் பரவி வருகிறது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கோழிக்கோடு தாமரைச் சேரியை சேர்ந்த 9 வயது சிறுமியும், 3 மாதக் குழந்தையும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளுடன் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயது நபர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நபர் பணியாற்றிய ஓட்டலில் வேலை செய்த மற்றொருவரும் மர்மமான முறையில் உயிரிழந்ததால், அவருக்கும் இதே நோய் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த ஓட்டலை கோழிக்கோடு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மூடினர். மேலும், அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

தற்போது, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் 11 பேர் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்புடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மலப்புரத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும் இந்த வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. நீர்த் தூய்மை குறைபாடே இந்த நோய் பரவலுக்குக் காரணம் என தெரிவிக்கின்ற சுகாதாரத்துறை, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம் என்று வலியுறுத்தி வருகிறது.