மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் கொடூரமான கணவன், மனைவி தகராறு கொலையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அரவிந்த், நந்தினி தம்பதிகள் மணந்திருந்தாலும், திருமணத்தின் பின்னர் இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலிலேயே நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற இளைஞருடன் நட்பு உருவாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அன்குஷின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் நந்தினி பங்கேற்றபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அரவிந்துக்கு கடும் கோபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து நேற்று, நந்தினி, அன்குஷ் மற்றும் அவரது நண்பர் கல்லு ஆகியோர் ஆட்டோவில் பயணம் செய்தபோது, அரவிந்த் வேறு ஒரு ஆட்டோவில் துரத்தி வந்து அவர்களை மடக்கிப் பிடித்துள்ளார்.
பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, நந்தினியை சுட்டார். நந்தினி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் உயிரிழந்தார். போலீசாரை எதிர்த்தும் துப்பாக்கியுடன் மிரட்டிய அரவிந்தை, தைரியமாக செயல்பட்ட காவல்துறை கைது செய்தது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன்னதாகவே அரவிந்துக்கு மற்றொரு மனைவியும், ஒரு பிள்ளையும் இருந்தது. இது பற்றி அறிந்த நந்தினி, போலீசில் புகார் அளித்ததை அடுத்து அரவிந்துக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டதாகவும், காரை நந்தினி மீது ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் முன்னதாகவே அரவிந்த் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
சமீபத்தில், அரவிந்த் போலி ஏ.ஐ. வீடியோ உருவாக்கி அவதூறு பரப்பியுள்ளதாகவும், தனது மீதான துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறி, நந்தினி தனது நண்பர் அன்குஷுடன் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். அங்கு இருந்து வீடு திரும்பும் வழியிலேயே இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
