பெங்களூரில் உள்ள “ஆரக்கள் இந்தியா” நிறுவனத்தின் ஆபரேஷன் பிரிவில் உயர்ந்த பதவியில் இருந்த பிரதீப் கண்ணன், மாதம் கைநிறைய சம்பளம் பெற்றவர். ஆனால் 2019ல் அந்த வசதியான ஐடி வாழ்க்கையை விட்டு விலகி, தமிழ்நாட்டின் கரூருக்கு திரும்பினார்.
பெரிய கனவு ஒன்றை மனதில் வைத்து, பலூடா ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கினார். அப்போது அவரை பார்த்த பலரும் சிரித்தனர். “ஐடி வேலை விட்டு பலூடா விற்பனையா?” என கேலி செய்தனர். ஆனால் இன்று அந்த பிரதீப் கண்ணன் தான் இந்தியா, துபாய் முழுவதும் 18க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளராகி உள்ளார்.
தற்போது ஏஐ வருகையால் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனால் பலரும் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். இப்படியான சூழலில், பிரதீப் கண்ணனின் வெற்றிக்கதை பலருக்கும் ஒரு ஊக்கமாக மாறியுள்ளது.
“தி பலூடா ஷாப்” என்ற பிராண்டை உருவாக்கிய பிரதீப் கண்ணன் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “நான் பணியை விட்டபோது பலர் சிரித்தனர். ஏனெனில் நல்ல சம்பளம், நல்ல பதவி, நல்ல குடும்பம் என எல்லாம் செட்டிலாகிவிட்டேன் என்று நினைத்தனர்.
ஆனால் என் மனம் வேறு ஒன்றை விரும்பியது. எனவே 2019ல் ராஜினாமா செய்து கரூரில் பலூடா விற்பனை தொடங்கினேன். இன்று இந்தியா, துபாயில் 18க்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகள் உள்ளன. இது என் கனவின் விளைவு,” என அவர் பெருமையாக பகிர்ந்துள்ளார்.
அவரது இந்த பதிவு நேற்று மாலை 3.36 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று மாலை வரை அந்த பதிவு 8.3 லட்சம் பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. 838 பேர் ரீபோஸ்ட் செய்துள்ளனர்; 10.5 ஆயிரம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். மேலும், அவரது எக்ஸ் பக்கத்தை 1,800க்கும் மேற்பட்டோர் புதிதாக பின்தொடர தொடங்கியுள்ளனர்.
சாதாரண நகரமான கரூரில் தொடங்கிய சிறிய கனவு, இன்று சர்வதேச அளவில் பெயர் பெற்ற பிராண்டாக மாறியுள்ளது. பிரதீப் கண்ணனின் இந்த வெற்றிக்கதை, வேலை இழப்பு அச்சத்தில் இருப்பவர்களுக்கு ஒரு உயிரூட்டும் உதாரணமாக மாறியுள்ளது.
