ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களான ஸ்ரீசாந்த்- ஹர்பஜன் சிங் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தகராறில் ஹர்பஜன்சிங் ஸ்ரீ சாந்தின் கன்னத்தில் அறைந்தார். அச்சமயத்தில் அது விளையாட்டுத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த தொடர் முழுவதும் ஹர்பஜன்சிங் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஹர்பஜன்சிங் பல பேட்டிகளில் ஸ்ரீசாந்திடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் அச்சம்பவம் குறித்து நினைவுபடுத்தி உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “என் வாழ்க்கையிலேயே மிக மோசமான சம்பவத்தை நீக்க வேண்டும் என்றால் அது ஸ்ரீ சாந்துடன் ஏற்பட்ட மோதல் தான். அது என்னை பல ஆண்டுகளாக வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
அப்போது அதனை செய்திருக்கக் கூடாது. நான் 200 முறைக்கு மேலும் மன்னிப்பு கேட்டு விட்டேன் பல வருடங்கள் ஆகியும் அது மிகவும் மோசமான அனுபவமாக உணர்கிறேன். நாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் பல வருடங்களான அச்சம்பவம் என்னை காயப்படுத்திக் கொண்டுள்ளது.
ஒருமுறை ஸ்ரீசாந்தின் மகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் “நான் உங்களுடன் பேச விரும்பலை நீங்கள் தான் என் அப்பாவை அடித்தீர்கள்” எனக் கூறிய வார்த்தைகள் என்னை முழுவதுமாக நொறுக்கி விட்டன. அந்த சமயத்தில் கண்ணீரை அடக்க முடியாத நிலைக்குச் சென்றேன்.
என் மீதான அந்த குழந்தையின் அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்னை ஒரு கெட்ட மனிதனாகவே பார்ப்பார்களே? இந்த கேள்வி என்னை மிகவும் மோசமான மனிதராக உணர வைத்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக அவரது மகளிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என வேதனையுடன் கூறினார்.
