அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த காரணத்தால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த 28ம் தேதி தொடங்கிய போர் இன்று நான்காவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத்தில் இருந்த 3 அமெரிக்க வீரர்கள் பலியாகினர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீதான இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் 4 வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு அரண்களை முழுமையாக உடைக்க இந்த கால அவகாசம் தேவைப்படும் என்றும் ஈரானின் உயர்நிலைத் தலைவர்கள் உள்ளிட்ட நாற்பத்தெட்டு முக்கியப் புள்ளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி அணுசக்தி திட்டத்தைத் தொடர்ந்ததால் இந்தத் தாக்குதல் தவிர்க்க முடியாததாகிவிட்டதாகக் கூறிய டிரம்ப் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் ஏவுகணைத் தளங்களை அழிப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்று தெளிவுபடுத்தினார். பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தும் ஈரான் உரிய நேரத்தில் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர் போர் திட்டமிட்டபடி தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
