ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 49 உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் நடத்தப்படும் இந்த ராணுவ நடவடிக்கைக்கு எபிக் பியூரி என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் ஏவுகணைத் திறனை முற்றிலும் அழிப்பது மற்றும் அந்த நாட்டின் கடற்படையைச் செயலிழக்கச் செய்வதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் உலகளாவிய அளவில் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவை முறியடிக்கவும் சாலை ஓரக் குண்டுகள் தயாரிப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக மிட்நைட் ஹேமர் என்ற பெயரில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களைப் பெற முடியாத நிலையை உறுதி செய்வதே இதன் இலக்கு என்று கரோலின் லீவிட் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வரும் ஈரானிய ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு முந்தைய தலைவர்கள் உரியப் பதிலடி கொடுக்கத் தவறிவிட்டதாகவும் தற்போது ஜனாதிபதி டிரம்ப் அந்தப் பலவீனத்தைச் சரிசெய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டு அமெரிக்கா இந்த மோதலில் இறுதி வெற்றி பெறும் என்றும் ஈரானின் மிருகத்தனமான அச்சுறுத்தல்கள் டிரம்பின் ஆட்சியின் கீழ் முடிவுக்கு வரும் என்றும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.