சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.18) நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் (CIBF 2026) நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டி ஆகிய மொழிகளில் வெளியாகும் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைக் கௌரவிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படுவதோடு, தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்” என்று அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பு இலக்கியத் துறையினர் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
