உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தின் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் இந்தத் திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பெண் சாலையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து ஓடிவந்த ஒரு பெரிய கருப்பு நிறக் காளை, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பெண்ணைத் தனது கொம்புகளால் முட்டி அப்படியே அந்தரத்தில் தூக்கி வீசியது.

சுமார் 10 வினாடிகள் ஓடும் அந்த சிசிடிவி வீடியோவில், காளை முட்டிய வேகத்தில் அந்தப் பெண் சாலையில் பலமாகத் தூக்கி எறியப்படுவதும், காயமடைந்து துடிப்பதும் பதிவாகியுள்ளது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பலத்த காயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உபி-யின் பல மாவட்டங்களில் தெருவோரக் கால்நடைகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.