நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகக் காத்திருக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இப்படத்தைத் தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தரிடமிருந்து பெற்ற 21 கோடி ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை.

இந்தத் தொகையை முழுமையாகச் செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்திலும் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 3.75 கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், எனவே படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் தயாரிப்பு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஏற்கனவே பலமுறை கால அவகாசம் அளித்தும் கடன் தொகையைச் செலுத்தத் தயாரிப்பாளர் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தடையை நீக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், வரும் ஜனவரி 19-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள 21.78 கோடி ரூபாயைச் செலுத்தத் தவறினால், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட்டு அந்தக் கடனை ஈடுகட்டச் சொத்தாட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.