திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு ஆதரவாக கண்ணதாசன் நீதிமன்றத்தில் வாதாடி வந்தார்.

அந்த சமயத்தில் கானா முருகன் மீது அதிகமான வழக்குகள் எழுந்ததால் அவரது வழக்கில் வாதாட வழக்கறிஞர் கண்ணதாசன் மறுப்பு தெரிவித்தார். இதனால் வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு சென்ற கான முருகன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.

அப்போது அவர் திடீரென தன் கையில் வைத்திருந்த அரிவாளால் வழக்கறிஞர் கண்ணதாசனை வெட்டி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். அதனை கண்ட பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணதாசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளி கானா முருகனை காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது  விண்ணமங்கலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை கையும் களவுமாக பிடித்து  கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.