மத்திய அரசு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பீகார் மாநிலத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சீதாமர்ஹி-பாபுதாம் மொதிஹாரி இடையே கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடையும் என பீகார் மாநில மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த திட்டம் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவ் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட நிலையில் திட்டத்திற்காக 204 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு மொத்தம் 76 கிலோ மீட்டர் தொலைவில் அந்த வழித்தடத்தில் 2 சந்திப்பு ரயில் நிலையங்கள் உட்பட 10 நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சரியான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் ரயில்வே துறைக்கு நிதி அதிக அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை அமைக்கும் பணிக்கு வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆரியன் சௌகான் என்ற வாலிபர் மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஆயிரம் ரூபாய் காசோலையை அனுப்பி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த வாலிபர் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் பீகார் மாநில இளைஞர்கள் போராட்டம் நடத்தினால் மட்டும்தான் ரயில்வே பாதைகள் அமைக்கும் பணி நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.