அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் விமான நிலைய ஓடுதளங்களில் நடனமாடுவது, ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக இந்தியாவின் தர்மசாலாவில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் செய்த அநாகரிகச் செயல் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள பரபரப்பான காய்கறிச் சந்தையில், வயதான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த வியாபாரிகளின் கடைகளில் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

வியாபாரி ஒருவர் காய்கறிகளை எடை போட்டுக் கொண்டிருக்கும் போது, கடையில் இருந்த தக்காளிகளை எடுத்து காற்றில் தூக்கிப் போட்டு விளையாடிய அந்த நபர், மற்றொரு காய்கறியைத் தவறவிட்டு அது சாலையில் விழுந்து வீணாகியுள்ளது. மேலும், அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறி எக்ஸ்  தளத்தில் இந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

இந்த வீடியோ வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களின் காரசாரமான விவாதங்களைத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, “ஒரு இந்தியர் வெளிநாட்டுச் சந்தையில் இப்படிச் செய்திருந்தால், அது உலகளாவிய செய்தியாக மாறி, இந்தியக் கலாச்சாரத்தையே கேலி செய்திருப்பார்கள்; ஆனால், ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் இப்படிச் செய்யும்போது அது வெறும் தனிநபரின் செயலாகப் பார்க்கப்படுவது ஏன்?” எனப் பலரும் ‘இரட்டை நிலைப்பாடு’ குறித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.