உத்தர பிரதேச மாநிலத்தில்  பஞ்சாப்பிற்கு ஹோண்டா சிட்டி காரில் போதைப்பொருள் கடத்திச் சென்ற கும்பல் ஒன்றை போலீசார் சினிமா பாணியில் துரத்திப் பிடித்துள்ளனர். சாலையில் சிக்னலில் நிற்காமல் வேகமாகச் சென்ற அந்தக் காரை போலீசார் பின்தொடர்ந்தபோது, கடத்தல் கும்பல் போலீஸ் வாகனத்தின் மீது மோதி சேதப்படுத்தியது.

இதனால் வாகனம் பழுதடைந்த நிலையில், அருகிலிருந்த உள்ளூர்வாசி ஒருவர் கொடுத்த காரை வாங்கிக்கொண்டு போலீசார் தங்களது சேஸிங்கைத் தொடர்ந்தனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த அந்தக் கும்பல், மக்கள் கூட்டத்தைக் கூட்டி வழியை மறைப்பதற்காகத் தங்களிடம் இருந்த 100 ரூபாய் நோட்டுகளைச் சாலையில் வீசி எறிந்துள்ளனர்.

இருப்பினும், மக்கள் முண்டியடிப்பதைக் கடந்து போலீசார் தொடர்ந்து துரத்தியதால், ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்குப் பதிலடியாகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடத்தல்காரர் ஒருவர் காயமடைந்தார்.

இறுதியில் அந்த கும்பலை அதிரடியாக வளைத்துப் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்று போதைப்பொருட்களைக் கடத்தியுள்ளதாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.