மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் தான் ராணுவ வீரர்கள், அனைத்து தரப்பு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தொழுகை நடத்துவார்கள். எனவே இந்த மசூதி நான்கு அடுக்கு பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மசூதியில் போலீஸ்காரர்கள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் தொழுகையில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு மத்தியில் இருந்த தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் அப்பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டுவெடிப்பினால் மசூதிக்குள் தொழுகையில் இருந்த 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 170 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு காரணமான நபரை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது மசூதிக்குள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான தற்கொலை படை பயங்கரவாதி போலீஸ் சீருடை அணிந்தும் முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்தும் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால்தான் போலீசாரால் அவரை சோதனை செய்ய முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கிடந்துள்ளது. இந்த துண்டிக்கப்பட்ட தலை பயங்கரவாதியின் உடையதா? என்பதை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரியான அன்சாரி கூறியதாவது “இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதி கான்ஸ்டபிள் ஒருவரிடம் மசூதி எங்கே உள்ளது?” என்று கேட்டுள்ளார். இந்த காரணத்தினால் அந்த பயங்கரவாதிக்கு அப்பகுதி பற்றி எதுவும் தெரியவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்திருக்கிறார். இதன் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனை விரைவில் கண்டறிவோம்” என அவர் கூறியுள்ளார்.