1979 முதல் சீனாவில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. ஆனால் இது மக்கள் தொகையை பாதித்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு சீன அரசு இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும் சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது வேலையில் இருந்து நீக்கப்படும் என அறிவித்தனர்.

நாட்டில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதை கண்ட சீன அரசு மெதுவாக குழந்தை பேரில் சட்ட தளர்வுகளை அமல்படுத்த தொடங்கியது. எனினும் மக்கள் தொகை பாதிப்பு தொடர்ந்து வந்து பிறப்பு விகிதத்தை விட கடந்த ஆண்டு இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இளைஞர்கள், பொருளாதாரம், சமூக அழுத்தம் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு திருமணம் செய்து கொள்ளவும் குழந்தையை பெற்றுக் கொள்ளவும் மறுப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியன.

அது மட்டுமல்லாமல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று சட்டத்தை மாற்றியமைத்தது சீன அரசு. ஆனால் திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள சட்டபூர்வமாக அனுமதி இல்லை என்றும் அப்படி யாரேனும் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டினை தளர்த்தியுள்ளது சீனாவின் சிச்சுவான் மாகாணம். இனி அங்கு ஒரு தம்பதி எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் தற்போதைய மக்கள் தொகை 80 மில்லியன் ஆக உள்ளதால் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த இந்த தளர்வினை சீன அரசு அறிவித்துள்ளது.