மினியாபோலிஸில் உள்ள அன்னுன்சியேஷன் கத்தோலிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவை உலுக்கியுள்ளது. 23 வயது ராபின் வெஸ்ட்மேன் என்ற முன்னாள் மாணவர், பள்ளியில் நடந்த மாஸ் பிரார்த்தனையின்போது கண்ணாடி ஜன்னல்கள் வழியாக துப்பாக்கியால் சுட்டதில் 8 மற்றும் 10 வயது குழந்தைகள் இருவர் உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் காயமடைந்தனர், அதில் 14 குழந்தைகள் மற்றும் மூன்று முதியவர்கள் அடங்குவர். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களில் “நியூக் இந்தியா”, “மஷ்அல்லாஹ்”, “இஸ்ரேல் வீழவேண்டும்” மற்றும் “6 மில்லியன் போதாது” (யூத இனப்படுகொலை குறித்த வெறுப்பூட்டும் வாசகம்) போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தை FBI “உள்நாட்டு பயங்கரவாதம் மற்றும் கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றம்” என விசாரிக்கிறது.
துப்பாக்கி சூடு நடத்தியவர் ராபின் வெஸ்ட்மேன், முன்னர் ராபர்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர், தன்னை பெண்ணாக அடையாளப்படுத்தியவர். இவர் தாக்குதலுக்கு முன் யூடியூபில் இரண்டு வீடியோக்களை பதிவேற்றியிருந்தார், அதில் தற்கொலை குறிப்பு மற்றும் மனநல பிரச்னைகள் குறித்து எழுதியிருந்தார்.
ஆயுதங்களில் “கில் டொனால்ட் டிரம்ப்”, “பர்ன் இஸ்ரேல்”, “ஃப்ரீ பாலஸ்தீன்” போன்ற வாசகங்களும் இருந்தன. ADL தீவிரவாத ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, வெஸ்ட்மேன் மற்ற மாஸ் ஷூட்டர்களை வெறித்தனமாக ஆராய்ந்தவர். இந்த தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டித்து, தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டார். மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, இந்த சம்பவத்தை “கற்பனைக்கு எட்டாத கொடூரம்” என வர்ணித்தார்.
