உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் நடந்த இதய வேதனைக்குரிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சி கிளப்பியுள்ளது. தாலி கட்டிய கணவனே தன்னை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி, நாசியா இஸ்மாயில் ஷேக் என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரை மாய்க்கும் முன் அவர் எடுத்த நான்கு நிமிட வீடியோ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. நாசியாவின் தந்தை மொஹம்மது உஸ்மான், “என் மகளை 2022-ஆம் ஆண்டு ஸ்மைல் ஷேக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்குப் பிறகு அவர் மற்றும் மாமியார் வீட்டினர், இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு புல்லட் பைக் தருமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்” என போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் மேலும், “என் மருமகன் மும்பையில் வசிக்கிறார். மகள் நாசியா அடிக்கடி கணவன் மற்றும் உறவினர்களால் உடல், மன ரீதியாக துன்புறுத்தப்பட்டார். கணவன் தினமும் விவாகரத்து செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து, அக்டோபர் 20 காலை 9 மணியளவில் நாசியா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்” என கூறியுள்ளார்.
மரணத்திற்கு முன் எடுத்த வீடியோவில் நாசியா கூறியதாவது: “நான் எதையும் தவறாக செய்யவில்லை. ஆனாலும் என் கணவன் விவாகரத்து செய்ய விரும்புகிறார். காரணம், என் சகோதரன் ஒருமுறை அவரிடமிருந்து மொபைல் கடன் வாங்கியது தான். இப்போது அதற்காக அவர் என்னை குற்றம் சாட்டுகிறார். நான் என் கணவனுடன் வாழ்க்கை முழுவதும் இருக்கவே விரும்புகிறேன்.
என் குழந்தை பாதுகாப்பாக இருக்கட்டும், அவனை யாரும் துன்புறுத்தாதீர்கள்” என கூறியுள்ளார். மேலும், “என் பெற்றோர்கள், சகோதரர்கள் யாரும் என் மரணத்துக்கு காரணமில்லை. இது என் விதியின் விளைவு. ஒரே ஒருவருடன் திருமணம் செய்து வாழ்ந்த பெண்ணே சமூகத்தில் மரியாதை பெறுகிறார். அதுபோல நானும் நினைவில் இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது போலீசார் கணவன் ஸ்மைல் ஷேக்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
