தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காந்திபுரி பகுதியில் சந்தியா(23) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தியா(21) என்ற தங்கை உள்ளார். நேற்று தினம் சந்தியாவின் 1 1/2 வயது பெண் குழந்தையை அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான மாடு முட்டியது. இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மாட்டு உரிமையாளரிடம் சந்தியா கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர்கள் சந்தியாவையும், சிந்தியாவையும் தாக்கியதாக தெரிகிறது.

இது குறித்து அக்காள், தங்கை இருவரும் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அவர்களிடம் தட்டார் மடம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து அக்காள், தங்கை இருவரும் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திற்கு சென்று உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றி விட்டனர். இதுகுறித்து அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் அக்காள், தங்கை இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.