டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்தது சட்ட விரோதம் என அறிவிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதன்பிறகு இந்த விவகாரத்தில் இதுவரை இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படி எடுத்திருந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கும். இந்த வழக்கில் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய நிறுவனத்தால் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதோடு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் இடையே இவ்வளவு இடைவெளி ஏன் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இது தொடர்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.