கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்த பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” (TAPS) செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது தங்களின் எதிர்காலம் குறித்த கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் அறிவித்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கவுள்ள முக்கியப் பலன்கள்:

50% ஓய்வூதியம் உறுதி: ஊழியர்கள் கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50 சதவீதம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு (DA), இனி ஓய்வூதியதாரர்களுக்கும் அதேபோல் வழங்கப்படும்.

60% குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் மறைந்தால், அவர் பெற்று வந்த தொகையில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும்.

பணிக்கொடை (Gratuity): ஊழியரின் பணிக்காலத்தைப் பொறுத்து அதிகபட்சமாக 25 லட்ச ரூபாய் வரை பணிக்கொடை வழங்கப்படும்.

அரசே ஏற்கும் நிதி: இதற்காகத் தேவைப்படும் கூடுதல் நிதிச் சுமையான சுமார் 13,000 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்கும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்ந்து, ஓய்வூதியம் கிடைக்காமல் தவித்தவர்களுக்கும் ‘சிறப்பு கருணை ஓய்வூதியம்’ வழங்க இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள முதல்வரின் இந்த அறிவிப்பை ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வரவேற்றுள்ளன. இதன் மூலம் திட்டமிட்டிருந்த போராட்டங்கள் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.