மும்பை குர்லா மேற்குப் பகுதியில் சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் இருவர், ஒரு கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை காலை நியூ மில் சாலை பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில், பாஜக் கட்சியைச் சேர்ந்த ஆகாஷ் சிங், ஆதித்யா பான்சே உள்ளிட்ட மூன்று நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.

 

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பெல்ட் மற்றும் கற்களால் அந்த கும்பல் தாக்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தைக் கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.