மத்திய பிரதேச மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருப்பது தெரியவந்து அரசு அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
மத்திய பிரதேச அரசு, மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற ‘பிச்சைக்காரர்கள் ஒழிப்பு’ எனும் சிறப்பு நடவடிக்கையை அண்மையில் தொடங்கியது. இந்த அதிரடி சோதனையின் போது தான், ‘மங்கிலால்’ என்ற மாற்றுத்திறனாளியின் பிரம்மாண்ட பின்னணி அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
தினமும் கடைவீதிகளில் மக்களிடம் யாசகம் பெற்று வந்த மங்கிலால், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்: அதாவது சொந்தமாக மூன்று கான்கிரீட் கீடுகள் வைத்துள்ளார்.
அதன் பிறகு வாடகைக்கு மூன்று ஆட்டோக்கள் மற்றும் ஒரு மாருதி சுசுகி காரை விட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி என்பதால் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீடும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிச்சை எடுப்பதன் மூலம் தினமும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை வசூலிக்கும் மங்கிலால், தனது வாகனங்கள் மற்றும் வீடுகளின் வாடகை மூலம் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறார். இதுமட்டுமன்றி, தன்னிடம் உள்ள உபரிப் பணத்தை வட்டிக்குக் கொடுத்து தொழில் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும், வருமானத்திற்காகத் தொடர்ந்து பிச்சை எடுக்கும் தொழிலை அவர் கைவிடாமல் செய்து வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய் வரையில் வட்டிக்கு பணம் கொடுத்து அவர் சம்பாதித்து வந்த நிலையில் அதிகாரிகள் அவரை பிடித்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
