ஜார்ஜியா மாகாணத்தில் அமைதியான குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூடு, உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தின் லாரன்ஸ்வில் (Lawrenceville) பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் இந்தத் துூரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. குடும்பத் தகராறு காரணமாக நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில், மீமு டோக்ரா (43), கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37) மற்றும் ஹரிஷ் சந்தர் (38) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்பதை அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது அந்த வீட்டில் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். மரண பயத்தில் அவர்கள் அலமாரிக்குள் (Closet) பதுங்கிக் கொண்டனர். அதில் ஒரு குழந்தை தைரியமாக 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளது.
போலீசார் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட 51 வயதான விஜய் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
