வேல்ஸ் நாட்டின் பீட்டர்ஸ்டோன் வென்ட்லூஜ் பகுதியில் 900 ஆண்டுகள் பழமையான புனித பீட்டர் தேவாலயத்தை வாங்கி, அதனைத் தனது கனவு இல்லமாக மாற்ற முயன்ற தம்பதியினருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.

அதாவது லூசி மற்றும் ரைஸ் என்ற தம்பதியினர் நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடந்த பழமையான தேவாலயம் ஒன்றை ஏலத்தில் வாங்கி, அதனை 5 படுக்கையறைகள் கொண்ட வீடாக மாற்றத் திட்டமிட்டனர். தேவாலயத்தைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கியபோது, அங்குள்ள தரைத்தளத்திற்கு அடியில் 5 அல்லது 6 உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், கட்டுமானப் பணிகளுக்காகத் தரையைத் தோண்டியபோது, அடுத்தடுத்து பிணக்குவியல்கள் தென்பட்டது அவர்களை நிலைகுலையச் செய்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கு மொத்தம் 83 எலும்புக்கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த உடல்களைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி இருந்தபோதிலும், தம்பதியினர் அந்த முடிவை ஏற்கவில்லை. அங்கிருந்த உடல்களில் தம்பதியினர், பெற்றோர் மற்றும் குழந்தைகள் எனப் பலரும் குடும்பமாக ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருந்ததைக் கண்ட லூசி, அவர்களின் அமைதியைக் குலைக்க விரும்பாமல் அவ்விடத்திலேயே விட்டுவிட முடிவு செய்தார்.

உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அந்த உடல்களின் மேலேயே நவீன தரையமைப்பு மற்றும் சூடாக்கும் வசதிகளை ஏற்படுத்தி தனது வீட்டைக் கட்டி முடித்துள்ளனர். தற்போது 1142-இல் கட்டப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம், ஆறு படுக்கையறைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட மாளிகையாக உருமாறியுள்ளது.