திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார் நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனும், கல்பனாவும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்தனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த சீனிவாசனும், கல்பனாவும் வீட்டில் முன்பக்க வளாகத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டனர்.
உடனடியாக தங்களது குழந்தைகளை எச்சரித்து வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு உள்ளே இருக்குமாறு தெரிவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டு வளாகத்தில் இருந்த வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.