கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தில் மீனவரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ஜேம்சின் உறவினர் ஜூலியஸ் என்பவர் டெல்லியில் இருக்கும் ஆலயத்தில் பங்கு தந்தையாக இருக்கிறார். அவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவார். நேற்று மாலை ஜூலியசின் முகநூல் மூலம் ஜேம்சை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மருத்துவ செலவுக்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. உங்களால் உதவ முடியுமா? என கேட்டுள்ளார்.

இதனை நம்பி ஜேம்ஸ் கூகுள் பே மூலம் வேறு ஒரு நபரின் செல்போன் எண்ணிற்கு இதுவரை 70 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலியஸ் தனது முகநூல் பக்கத்தில் இருந்து யாரோ பணத்தை பறிக்கின்றனர். அதனை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜேம்ஸ் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.