தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சாலை மற்றும் மேம்பால பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சாலை மற்றும் மேம்பால பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது சாலைகளில் செல்லும் கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோன்று இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் சாலைகளின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பது நியாயமானது. எனவே சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை முதன்மை பணிகளாக செய்ய வேண்டும். மேலும் தோண்டப்படும் சாலைகள் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதால் அந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் சாலை பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் பணி தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்த துறை சார்ந்த அதிகாரி அல்லது அமைச்சரின் கவனத்திற்கு அதை உடனே எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.