சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் சிரமமின்றி அடைய சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள் கிளம்பாக்கத்திற்கு இயக்கப்பட இருக்கிறது. இதேபோன்று சுமார் 20 கோடி மதிப்பீட்டில் புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும் கிளாம்பாக்கத்தில் அமைகிறது. அதன் பிறகு ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் அடைய ஸ்கைவாக் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக சென்னை எழும்பூரில் பெரு நகர வளர்ச்சி குழுமம் சார்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் சிரமமின்றி அடைய போக்குவரத்தை விரிவுபடுத்துதல்,  புறநகர் ரயில்வே நிலையத்தை அமைத்தல் போன்ற பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் ரயில்வே நிலையத்தை அமைப்பதற்கு முதற்கட்டமாக பெருநகர வளர்ச்சி குழுமம் 4 லட்ச ரூபாய் நிதியை விடுவிக்க இருக்கிறது. மேலும் நவீன ஸ்கைவாக் அமைப்பதற்கான டெண்டர் கோரும் பணிகள் ஜூலை மாதத்தில் முடிவடைந்து விரைவில் அப்பணிகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.