கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வசிக்கும் 16 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுடன் பழகி வந்தார். அதே இளம் பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணுடன் இரண்டு சிறுவர்களும் அடிக்கடி பேசி வந்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று 17 வயது சிறுவன் 16 வயது சிறுவனை தொடர்பு கொண்டு இளம் பெண்ணுடன் பழகுவது குறித்து பேச வேண்டும் என அழைத்தார். இதனையடுத்து தனது நண்பர்கள் 4 பேருடன் 16 வயது சிறுவன் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதிக்கு வந்துள்ளார்.

அங்கு ஏற்கனவே நான்கு நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனுக்கும் 16 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த ஜவுளி கடை உரிமையாளரான பாலசந்தரமூர்த்தி என்பவர் சிறுவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

அப்போது சிறுவர்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசுந்தர மூர்த்தியின் கையில் குத்தியுள்ளனர். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சிறுவர்கள் தப்பி சென்றனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த பாலசுந்தரமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 8 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.