அரியானா மாநிலம் குருகிராமில் 7ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமி ஒருவர், தனியார் நிறுவன ஊழியரால் பல மாதங்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2024 டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை அந்தச் சிறுமியை ராஜேஷ் என்ற 34 வயது நபர் மிரட்டிப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

தான் கர்ப்பமான விவரம் தெரியாமல் பள்ளிக்குச் சென்று வந்த அந்தச் சிறுமிக்கு, திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டபோது தான் அவர் கர்ப்பமாக இருந்ததே குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குற்றவாளியான ராஜேஷ், சிறுமி கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து கடந்த பிப்ரவரி மாதமே தனது வாடகை வீட்டை காலி செய்துவிட்டுத் தப்பியோடிய நிலையில், தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு துயரச் சம்பவமாக, மனேசர் பகுதியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 19 வயது இளம் பெண் ஒருவரை, அவரது சகோதரரே நண்பருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டிக் கொலை செய்துள்ளார். கௌரவக் கொலை என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண்ணின் சகோதரரும் அவரது 30 வயது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. குருகிராம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்தச் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்றச் செயல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்குக் குழந்தைகள் நலக் குழு மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.