முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில், முக்கிய வீதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவதால், பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதால், அப்பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பேரூராட்சி அதிகாரிகள்  இணைந்து மாடுகளை விரட்டிச் சென்று அடைக்கும் பணியில் இரவு நேரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், மன்னார்குடி ரோடு ரயில்வே கேட்டில் துவங்கி, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், மொத்தம், 46 மாடுகள் பிடிக்கப்பட்டு, தண்ணீர் தொட்டி அருகே அடைக்கப்பட்டன.

இந்நிலையில் தங்களது மாட்டை மீட்க விரும்பும் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய், அபராதமாக  வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமை கோரப்படாத மாடுகள் மயிலாடுதுறை அருகே உள்ள கோசாலையிடம் ஒப்படைக்கப்படும். முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களிடையே பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.