மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் ஆந்திர கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் மிக்ஜாம் புயல் நகரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் புயல் தற்போது 100 கி.மீ தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் வேளையில் தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரவுக்கு பின் மழை குறையும் என்றும் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.