திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தில், செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் , பழமையான கட்டடங்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனமழையால், கட்டடத்தின் மேல்பகுதியில்  மழைநீர் தேங்கியது. இதையடுத்து, கட்டடத்தின் மேல் தளம் சேதமடைவதைத் தடுக்க, மழைநீரை அகற்றுமாறு மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பெயரில் இந்த ஆபத்தான பணியில் மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து விளக்கம் அளித்த தலைமையாசிரியர் கட்டிடத்தின் மேல் நீர் தேங்கி இருப்பது கட்டிடத்திற்கு சேதம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அதுவரக்கூடிய காலத்தில் மாணவர்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதால் செயலை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இருப்பினும் சமூக ஆர்வலர்கள் வெளி ஆட்களை வேலைக்கு நியமித்து இப்பணிகளை தலைமையாசிரியர் மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் அல்லது குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய பின் மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்தி இருக்கலாம் எனவும் இது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.