பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பிரதமரின் 100-வது மன்கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கேட்காத பள்ளி மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூனில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிரதமர் மோடியின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியை கேட்கவில்லை என்று பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நிகழ்ச்சியை கேட்காத மாணவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது பள்ளி நிர்வாகம். அதன்பிறகு அபராதம் செலுத்த முடியாதவர்கள் நிகழ்ச்சியை கேட்காததற்கான உரிய மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் புகார் கொடுத்ததால் மாநில கல்வித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பிரதமரின் உரையை கேட்காததால் அபராதம் விதிக்கப்பட்டதாக வெளிவந்த குற்றசாட்டை மறுத்துள்ளது. அதன் பிறகு அவர்களிடம் அபராதம் எதுவும் வசூலிக்கப்படவில்லை எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெற்றோர்கள் புகார் கொடுத்ததால் பள்ளி நிர்வாகத்திற்கு மாநில கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு இன்னும் மூன்று நாட்களுக்குள் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.