கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட போது காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார். இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் நேற்று கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து கர்நாடகாவில் வெற்றி பெற்ற நிலையில் அதை பாஜக திருடிவிட்டது. பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது எனக்கு தெரியும்.

பயங்கரவாதத்தால் என்னுடைய பாட்டி மற்றும் தந்தை ஆகியோரை நான் இழந்துவிட்டேன். இதனால் பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது பிரதமர் மோடியை விட எனக்கு நன்றாக தெரியும். வருகின்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பெரும்பான்மை வாக்குகள் வித்யாசத்தில் மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். 150 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பாஜக காங்கிரஸ் ஆட்சியை திருடிவிடும். அவ்வாறு திருடினால் அவர்கள் உங்களுடைய பணத்தை தான் திருடுவார்கள் என்று கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை கர்நாடகாவில் வீசுகிறது என்பது தனக்கு நன்றாக தெரியும் எனவும் ராகுல் காந்தி கூறினார்.