கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தைக் கோரவோ அல்லது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த முக்கியத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், 1950-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட ஆணை பிரிவு 3-ன் படி, இந்து, சீக்கியம் மற்றும் புத்த மதம் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் தங்களது பட்டியல் சாதி அந்தஸ்தை முழுமையாக இழக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டினர். ஒருவர் தீவிரமாகக் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் பட்சத்தில், அவர் தொடர்ந்து பட்டியல் சாதியாக இருக்க முடியாது என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த அவருக்கு உரிமையில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
