உத்தரப் பிரதேச மாநிலத்தின் உயரிய காவல் துறை பதவியான டிஜிபி (DGP) அந்தஸ்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான டி. பிரகாஷ் மற்றும் எல்.வி. ஆண்டனி தேவ் குமார் ஆகிய இருவரும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1994-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏடிஜிபி நிலையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ​இதில் டி. பிரகாஷ் ரயில்வே ஏடிஜிபி-யாகவும், ஆண்டனி தேவ் குமார் ராமர் கோயில் பாதுகாப்புப் படையின் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர்கள். இவர்களில் ஒருவரை மாநிலத்தின் நிரந்தர டிஜிபியாக நியமிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான இறுதிப் பட்டியலில் இவர்களது பெயர்களும் இடம் பெற்றுள்ளதால், உ.பி. மாநிலத்தின் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் தலைமை தாங்கும் வாய்ப்பு ஒரு தமிழருக்கே கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இவர்களுக்கான பதவி உயர்வு ஆணையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநரான தமிழகர் ஏ. தினேஷ்குமார் வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.