இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நீக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் லீக் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளிலும் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளதால் மனரீதியாகச் சோர்வடைந்துள்ள அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மீண்டும் அணியில் இணையவுள்ளார்.
வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான அகமதாபாத் மைதானத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
