2026 டி20 உலகக் கோப்பையின் குரூப் ஏ பிரிவில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடித் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, இதுவரை பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சியளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சொற்ப பந்துகளில் ஆட்டமிழந்த அவர், கடந்த புதன்கிழமை நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் மூன்றாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற ஆஷிஷ் நெஹ்ராவின் மோசமான சாதனையை அபிஷேக் சமன் செய்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாக உலகின் முதல்நிலை டி20 பேட்டரான அவர் இத்தகைய ஃபார்ம் அவுட்டில் இருப்பது இந்திய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அபிஷேக் சர்மாவின் இந்த மோசமான ஆட்டம் குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தானின் முகமது அமீர், அவரைத் தொழில்முறைத் தகுதியற்ற ‘ஸ்லாக்கர்’ (Slogger) எனச் சாடியுள்ளார். எல்லாப் பந்துகளையும் அடித்து ஆட வேண்டும் என்ற எண்ணம் சர்வதேசத் தரத்திலான பந்து வீச்சாளர்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்ட அமீர், பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் ஆரம்பக்காலத்தில் சந்தித்த அதே தொழில்நுட்பக் குறைபாடுகளை அபிஷேக் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆஃப்-சைடு ஆட்டத்தில் போதிய முன்னேற்றம் காணாவிட்டால், தரமான பந்து வீச்சாளர்கள் அவரது பலவீனத்தை எளிதில் பயன்படுத்தி வெளியேற்றி விடுவார்கள் என்றும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் போலி பிம்பத்தை விரைவில் அம்பலப்படுத்திவிடும் என்றும் அமீர் காட்டமாகக் கூறியுள்ளார்.