உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் (Prayagraj) ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதுச் சிறுமி ஒருவரை அவரது சொந்த தாய் தந்தையே சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். காண்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் சோன்கர் மற்றும் அவரது மனைவி சந்தோஷ் தேவி ஆகிய இருவரும் சேர்ந்து, தங்கள் ஒரே மகளான சரதாவை உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளனர்.

மயக்கமடைந்த மகளை, வீட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் இருந்த முட்புதருக்குள் கொண்டு சென்று, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் சடலம் வியாழக்கிழமை காலையில் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

முதலில், சிறுமி அதிகாலையில் வெளியே சென்றதாக அவளது குடும்பத்தினர் கூறினாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி முந்தைய நாள் இரவு 11-12 மணி அளவில் உயிரிழந்தது உறுதியானது.

இதனால், போலீசாருக்குக் குடும்பத்தினர் மீது சந்தேகம் வலுத்தது. மேலும், மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து திரும்பத் திரும்ப சிறுமியின் வீட்டிற்குச் சென்று நின்றதால், சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை ரமேஷ் சோன்கரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், “என் மகளின் நடவடிக்கைகளால் நான் சோர்வடைந்து விட்டேன். அவள் பல பையன்களுடன் பழகினாள். பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை” என்று கூறி, தன் மனைவி சந்தோஷ் தேவியுடன் சேர்ந்து மகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்ய உதவியதற்காகச் சிறுமியின் தாயையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்தப் பயங்கரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.