பெங்களூருவுக்கு அருகே உள்ள அனேக்கல் தாலுகாவில் (Anekal taluk) நடந்த ஒரு பயங்கரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகூரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி பத்ரம்மாவை, அவரது அண்டை வீடான தீபா என்ற பெண், தங்கச் சங்கிலியை திருடும் நோக்கில் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி காணாமல் போன மூதாட்டியை, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மறுநாள் போலீசில் புகார் அளித்தனர்.
தீவிர விசாரணையில், கடைசியாக மூதாட்டி பத்ரம்மா, அண்டை வீடான தீபாவின் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்துத் தீபாவை பிடித்து விசாரணை நடத்தியபோது, இந்தக் கொடூரக் கொலை குறித்த திடுக்கிடும் உண்மைகளை அவர் ஒப்புக்கொண்டார்.
போலீஸ் விசாரணையில், தீபா, பத்ரம்மாவை வீட்டுக்கு அழைத்து, ‘கஜ்ஜாயா’ என்ற பாரம்பரிய இனிப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி வரவழைத்துள்ளார். பின்னர், மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடியுள்ளார்.
கொலைக்குப் பிறகு, உடலை ஒரு பையில் அடைத்து, இரண்டு நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே மறைத்து வைத்துள்ளார். உடல் அழுகிய வாசனை வந்ததால், மகனை அழைத்து “குப்பையைக் கொட்ட வேண்டும்” என்று கூறி, உடலை இன்னொரு பைக்கு மாற்றி, தோடதிம்மசந்திரா ஏரிக்கரை அருகே உள்ள புதரில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
கொலையாளி தீபாவை போலீசார் கைது செய்து, கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
