ரஷ்யப்படையினர் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மீது 11 மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். ரஷ்யா மேற்கொண்டு வரும் மும்முனை தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் சேதமடைந்தன.

பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில், லட்சக்கணக்கானோர் கடும் பாதிப்படைந்தனர். சமீப நாட்களாக உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ரஷ்யா, கடல் மற்றும் வான் வழியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தது. இதில் மின் நிலையங்களையும், மின் கட்டமைப்புகளையும் நோக்கி அதிக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுக்க நேற்று நள்ளிரவு நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடந்தது. அப்போது உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, தன் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினார். அப்போது வெற்றி கிட்டும் வரை தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

அந்த சமயத்தில், புது வருடம் பிறந்த 30 நிமிடத்தில் கீவ் நகரத்தின் மீது ரஷ்யப்படையினர் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில், மின் கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.