சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில் தலையிட்டு அந்த அமைப்பை விரட்டினர். இரண்டு நாடுகளிலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரிடமிருந்த பகுதிகள் அனைத்தையும் மீட்கப்பட்டு அவர்கள் விரட்டப்பட்டனர்.

எனினும், சமீப நாட்களில் மீண்டும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரின் கை ஓங்கி இருக்கிறது. அப்பாவி மக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் சிரியா நாட்டின் டெய்ர் அஸ் ஜோர் என்ற மாகாணத்தில் இருக்கும் எண்ணெய் வயலில் பணிபுரியும் ஊழியர்கள் பணி முடிந்த பிறகு மூன்று பேருந்துகளில் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பி கொண்டு இருந்தார்கள்.

அந்த சமயத்தில், தீவிரவாத அமைப்பினர் பேருந்து செல்லும் வழி பாதையில் வெடிகுண்டுகளை  வெடிக்க செய்ததில் மூன்று பேருந்துகளும் வெடித்து சிதறியது. தொழிலாளர்கள் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். அதனைத்தொடர்ந்து தீவிரவாதிகள் பேருந்துகளை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதலும் மேற்கொண்டனர். இதில் பல தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த கொடூர தாக்குதலுக்கு உடனே எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.