அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் தற்போது “பலவீனமாகவும், ஒருங்கிணைப்பற்றவையாகவும்” உள்ளன என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு இனி அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை என்று டிரம்ப் நிர்வாகம் சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அவரது கருத்துக்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் மற்றும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக டிரம்ப் மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு இடையேயான முரண்பாட்டை மேலும் அதிகரித்துள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்க மறுத்ததைக் குறிப்பிட்ட டிரம்ப், “அவர் சமாதானத்துக்கான வாய்ப்புகளைக் கவனத்தில் கொள்ளத் தொடங்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். உக்ரைன் ராணுவம் போரில் பின்னடைவு அடைந்து வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளில் சமரசம் அவசியம் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் போரைக் காரணம் காட்டித் தேர்தலைத் தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து, அங்கு உடனடியாகத் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமெரிக்காவின் புதிய திட்ட வரைவைப் ஜெலென்ஸ்கி இன்னும் படிக்கவில்லை என்று குறிப்பிட்ட டிரம்ப், “அதை அவர் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இது அவருக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்” என்றார். மேலும், ரஷ்யாவை விட உக்ரைன் ஒரு மிகச் சிறிய நாடு என்பதால், ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாதது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். “ரஷ்யாவின் கை ஓங்கி இருக்கிறது. அது எப்போதும் அப்படித்தான். அவர்கள் மிக பெரியவர்கள். அவர்கள் மிகவும் பலமானவர்கள்,” என்று டிரம்ப் கூறியிருப்பது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே கவலையை அதிகரித்துள்ளது.
