ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடத்த திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ்  ஊர்வலத்தை கோவை உள்ளிட்ட 6 இடங்களில் அனுமதிக்க முடியும் என்றும்,  மீதியுள்ள 44 இடங்களில் உள்ளரங்க கூட்டமாக நடத்திக் கொள்ளலாம். சுற்றுசுவருக்குள் நடைபெறும் நிகழ்ச்சியாக நடத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீடு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.இதில் ஒரு வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணன் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 29-ம் தேதி ஆர் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்,  அதற்கு அனுமதி அளிக்க கோரி காவல்துறையிடம் கடந்த 29ஆம் தேதி விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது காவல்துறை தரப்பில் மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில், இந்தவழக்கில் கடந்த முறை நீதிபதிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்திருப்பதாகவும், தனிப்பட்ட முறையில் மனு கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாவட்ட வாரியாக தான் முடிவெடுக்க முடியும் என்றும்,  கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் அனுமதி வழங்க முடியாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் இதே மாதிரியான நடைமுறைதான் அனைத்து கட்சியினருக்கும் பின்பற்றப்படுகிறதா ? அப்படி பின்பற்றப்பட்டால், அதை  நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாமா ? என்று காவல்துறை தரப்பு  வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து இருக்கிறார்கள்.

அதே போல ஆர்.எஸ்.எஸ் அனுவகுப்பு ஊர்வலம் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அனைத்து மேல்முறையீட்டு மனுக்களுக்கும் பதில் மனுக்களை ஜனவரி 19ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, மனுதாரர்களுக்கு அதன் நகல்களை வழங்க வேண்டும் என்றும்,  இறுதி விசாரணை ஜனவரி 20ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருக்கிறார்கள்.