அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டதற்கு பிறகு அது எப்படி எல்லாம் மாற்றப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எல்லாம் தனித்தனியாக ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு  ஒரு வருடத்திற்குள் பொதுச் செயலாளார் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே தேவைப்பட்டிருக்காது.

ஆனால் அதை செய்யாத எடப்பாடி பழனிசாமி தரப்பினர்,  புதிதாக பொறுப்புகள் உருவாக்கப்பட்டு விதிமுறைகள் எல்லாம் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதற்கு பிறகு எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தபோது,  திடீரென மீண்டும் பழைய முறையே கொண்டு வர முயல்வது என்பது அதிமுகவின் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகவும், முரணானதாகவும் இருக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.

அப்பொழுது அவை தலைவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை என்பது தவறானது என்று பன்னீர்செல்வம் வாதம் வைத்த போது அவை தலைவர் என்றால் யார் ? அவருக்கான பதவிக்கான பொறுப்புகள் என்னென்ன உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் கேட்ட போது,  பொது குழு செயற்குழு கூடுவதற்கான முடிவை எடுக்கக்கூடிய இடத்தில் அவை தலைவர் இருக்கிறார் என்று ஓபிஎஸ் தரப்பு பதில் அளிக்கப்பட்டது .

பொது குழு செயற்குழு எப்படி கூட்டப்படுகிறது ? என்று கேட்டபோது மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பொதுக்குழு செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பட்சத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை  ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒன்றாக இணைந்து சொன்னால் மட்டும்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று கட்சி விதிமுறைகள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது என்பதை ஓபிஎஸ் தரப்பு தனக்கு சாதகமான விஷயங்களாக முன்வைத்து வருகிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் தற்போது கூட்டப்பட்ட அந்த பொது குழு அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என அனைத்துமே விதிமுறைகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுச்செயலாளர் பதவி என்பது நிரந்தரமாக டாக்டர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கே உரியது என்று ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு,  இனி அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என்றும் முடிவு எடுக்கப்பட்ட நிலையில்,  அவற்றை மாற்றி இருக்கிறார்கள். எனவே நீதிமன்றம் இந்த விகாரத்தில் தலையிட்டு உத்தரவுகளை பிறப்பித்து பொதுக்குழு முடிவுகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வாதங்களை முன்வைத்து வருகின்றார்.