சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம்.

இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் 3 வருடமாக மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த நிறுவனத்தில் அதிகாரிகள் வருடாந்திர வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் ரூபாய் 45 கோடி கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.

அந்த வருடாந்திர வரவு, செலவு கணக்குகளை நவீன் பஞ்சாலால் தான் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்திருந்தார். இதனை அடுத்து பால் நிறுவனம் சார்பில் கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் மேலாளர் நவீன் பஞ்சாலாலை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் நாளை வருவதாக கூறியுள்ளார். இதற்கிடையில் விசாரணைக்கு முந்தைய நாள் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த குழல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பால் நிறுவன கையாடல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளதால் தான் எப்படியும் மாட்டிக் கொள்வோம் நம்மை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் நவீன் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து நிறுவனத்தின் படம் கையாடல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரபடுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.